ஆண்களுக்கு தெரியாமல் பெண்களால் கடைப்பிடிக்கப்படும் ரகசியமான விரதம்

 Tuesday, January 25, 2022  03:12 PM   No Comments

விரதமிருக்கும் செவ்வாய்க்கிழமை இரவில் சுமார் 10 மணிக்குமேல் ஆண்கள் எல்லோரும் உறங்கிய பின்னர், விரதம் இருக்கும் பெண்கள், வயதான சுமங்கலிப் பெண் ஒருவர் வீட்டில் கூடுவர்.

ஔவையார் வழிபாடு தென்தமிழகம் எங்கும் இருந்து வருகிறது. ஔவையாருக்கு கடைபிடிக்கப்படும் சிறப்பான இந்த விரதம் தை மாத செவ்வாய்க்கிழமைகளில் தென்தமிழகத்தில் ஒவ்வோர் ஊரிலும் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த விரதத்தால் குடும்ப ஒற்றுமை வளர்ந்து, வறுமை நீங்கி, கணவரின் ஆயுள் நீடிக்கும் என்பது பெண்களின் நம்பிக்கை..விரதமிருக்கும் செவ்வாய்க்கிழமை இரவில் சுமார் 10 மணிக்குமேல் ஆண்கள் எல்லோரும் உறங்கிய பின்னர், விரதம் இருக்கும் பெண்கள், வயதான சுமங்கலிப் பெண் ஒருவர் வீட்டில் கூடுவர். மூத்த பெண்கள் சொல்லச் சொல்ல இளம் பெண்கள் இந்த நோன்பினைச் செய்வார்கள். ஒவ்வொருவர் வீட்டில் இருந்தும் நெல், வெல்லம், தேங்காய், எண்ணெய், திரி, விளக்கு, கொழுக்கட்டை அவிக்க துணி இப்படி கொண்டு வருவார்கள். நெல்லைக் குத்தி, அரிசி புடைத்து, உப்பு சேர்க்காமல் கொழுக்கட்டை செய்வதே வழக்கம். குத்திய அரிசி மாவால் விளக்கு செய்து அதில் தீபம் ஏற்றுவார்கள். எரியும் விளக்கில் அதன் அசைவுக்கு ஏற்ப மாறி மாறித் தோன்றும் வடிவங்களைப் போலவே மாவை உருட்டி பல்வேறு உருவங்களில் கொழுக்கட்டை செய்வார்கள்.

இரவெல்லாம் பாடியும், கதை சொல்லியும் மகிழ்ந்தும் இருந்த பெண்கள் விடிவதற்கு முன்பு, அங்கிருந்த அடையாளங்களை எல்லாம் சுத்தம் செய்வார்கள். கொழுக்கட்டைகளை மீதமில்லாமல் எல்லோரும் உண்டு விடுவார்கள். அடுத்த நாள் விடிந்ததும் வேறு உணவை உண்பதற்கு முன்பாக இந்தக் கொழுக்கட்டைகள் முழுவதையும் உண்டுவிட வேண்டும் என்பது ஐதீகம். பூஜை செய்த பூ எல்லாவற்றையும் ஆற்றிலோ, குளத்திலோ போட்டு விடுவார்கள். குளித்துவிட்டு, நிறை குடத்துடன், மஞ்சள், குங்குமம் சூடி, புது வளையல் அணிந்து வாய் பேசாமல் வீடு வருவார்கள். விரதமிருந்த பிறகு வரும் பகலில் யாருக்கும் எதுவும் தங்கள் கையால் கொடுக்க மாட்டார்கள். இந்த விரதம் செவ்வாய்க்கிழமை பிள்ளையார் விரதம் என்றும் சில பகுதிகளில் கொண்டாடப்படுகிறது.

இந்த விரதம் அனுஷ்டிப்பதால் திருமணமாகாத பெண்களுக்கு நல்ல மாப்பிள்ளையும், திருமணமாகி குழந்தையில்லாத பெண்களுக்குக் குழந்தை வரமும் கிடைப்பதுடன், குடும்ப நலமும் மேம்படும் என்பது நம்பிக்கை. பெண்களால் கடைப்பிடிக்கப்படும் இந்த ரகசியமான நோன்பில் ஆண்களுக்கு அனுமதியில்லை. ஆண் குழந்தைகளுக்குக் கூட அங்கே அனுமதியில்லை. அவ்வளவு ஏன், அங்கு விநியோகிக்கப்படும் கொழுக்கட்டை பிரசாதத்தைக் கூட ஆண்கள் பார்க்கவோ, உண்ணவோ கூடாது என்பது நடைமுறை. இந்த விரதத்துக்குப் போகக் கூடாது என்று ஆண்கள் தடுத்தால், அந்த ஆணின் கண் பார்வை பாதிக்கப்படும் என்பது கிராம மக்களின் நம்பிக்கை. அதுபோலவே இந்த விரதத்தில் எழும்பும் எந்தச் சத்தமும், உரல் சத்தம் உட்பட எதுவும் ஆண்களின் காதுகளில் விழக் கூடாது என்பதும் ஐதீகம்.Similar Post You May Like
Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel