அடர் காட்டை `மலைகளின் அரசி'யாக்கிய கலெக்டர்! யார் இந்த ஜான் சல்லிவன்? ஊட்டி பிறந்த கதை!

 vikatan.com  Tuesday, May 24, 2022  08:30 PM   No Comments

ஊட்டி நகரின் நடுவில் மிகப்பெரிய ஏரி ஒன்றையும் வெட்டி மலையின் பல பகுதிகளில் ஓடிய சிறிய ஓடைகளை அதனுடன் இணைத்து நீர்வளத்தை உறுதி செய்தார்.

பரபரப்பான மாநகர வாழ்க்கை வாழ்பவர்கள் தங்களை கொஞ்சமேனும் ஆசுவாசப்படுத்திக்கொள்ளச் செல்லும் முதல் இடமாக இருப்பது மலைகளின் அரசி நீலகிரிதான். எழில் கொஞ்சும் இயற்கை அமைப்பு, மலைகளை உரசிச்செல்லும் மேகக்கூட்டங்கள், மூலிகை வாசம் கலந்த குளு குளு காற்று ஆகியவை நம்மை நிரந்தரமாக அங்கேயே தங்கிவிடச் சொல்லும். இப்படி இயற்கைக்கு இலக்கணமாக விளங்கும் ஊட்டியை உருவாக்கியவர்தான் `ஊட்டியின் தந்தை' என்றழைக்கப்படும் ஜான் சல்லிவன். 1788-ம் ஆண்டு ஜூன் 15-ம் தேதி ஸ்டீபன் சல்லிவன்-ஆன் சல்லினன் இணையருக்கு இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் பிறந்தவர் ஜான் சல்லிவன். இவர் தந்தை கிழக்கிந்திய கம்பெனிக்காக தஞ்சை நகரில் பணியாற்றியவர். இவரின் சீரிய முயற்சியால்தான் தஞ்சையைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல ஆங்கில வழிக்கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட்டன.

ஜான் சல்லிவன் தன் 15-வது வயதில் கிழக்கிந்திய கம்பெனியில் எழுத்தராகப் பணியில் சேர்ந்தார். தன் அசாத்தியத் திறமையால் 1806-ல் தென்னாற்காட்டு மாவட்ட நீதிமன்றப் பதிவர், 1807-ல் ரகசியக் காப்பு, அரசியல் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகத் தலைமைச் செயலரின் உதவியாளர், 1809-ல் மைசூரில் இருந்த இங்கிலாந்து அமைச்சக உதவியாளர் எனப் பல பதவிகளை வகித்தார் ஜான் சல்லிவர். 1814-ம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்டத்தின் ஆட்சியராகவும், 1815-ல் கோவை மாவட்ட சிறப்பு வருவாய்த்துறை அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டார். இதன் பிறகு அதே ஆண்டு கோவை மாவட்ட நிரந்தர ஆட்சியராகவும் நியமிக்கப்பட்டார்.

அப்போதைய கோவை மாவட்டமானது இப்போதைய ஈரோடு, நீலகிரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியதாக இருந்தது. இயற்கை மற்றும் சுற்றுச்சூழலில் ஆர்வம் கொண்ட ஜான்சல்லிவன் கோவை மாவட்ட கலெக்டராகப் பணிபுரிந்தபோது, நீலகிரியின் ‘நீல மலைகளைப் பற்றிப் பரப்பப்படும் அற்புதமான கதைகளின் உண்மைத்தன்மையை சரிபார்த்து, அறிக்கையை அனுப்பவும்’ என்று கிழக்கிந்திய கம்பெனி அவருக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனால் நீலகிரியை ஆய்வு செய்யத் தொடங்கிய அவருக்குப் பல அற்புதமான அனுபவங்கள் கிடைத்தன.

மலைப்பகுதியின் காலநிலையும், இயற்கை அமைப்பும் இவருக்கு மிகவும் பிடித்துப்போக, 1819-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22-ம் நாள், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிரபல இயற்கை ஆர்வலரான சேன் பாபிசுட் லூயிசுடன் நீலகிரி மலையில் ஏற்கெனவே வாழ்ந்துவந்த படுகர் மக்களின் வழிகாட்டுதலுடன் உதகமண்டலப் பகுதியை அடைந்தார். சுமார் மூன்று வார காலம் அங்கேயே சுற்றித் திரிந்த அவர், அம்மலைப்பகுதியை மேலும் எழிலுற அழகுபடுத்த முடிவு செய்தார்.முதலில் நீலகிரியின் கன்னேரிமுக்கு என்ற கிராமத்தின் உள்ளூர் மக்கள் உதவியுடன் கற்களால் ஆன வீடு ஒன்றைக் கட்டினார். அந்த வீட்டைத் தன் அதிகாரபூர்வ பங்களாவாகவும், அலுவலகமாகவும் பயன்படுத்தத் தொடங்கினார். நீலகிரியின் முதல் கட்டடமான இது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்டு ஜான் சல்லிவன் நினைவகமாக மாற்றப்பட்டது. இங்கு நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர், கோத்தகிரி, ஊட்டி உள்ளிட்ட நகரங்களில் அரிய புகைப்படங்கள், பழங்குடியின மக்களின் வாழ்க்கை முறை ஆகியவை காட்சிபடுத்தப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து நீலகிரியின் மையப்பகுதியான ஊட்டியில் அண்டை மாவட்ட அதிகாரிகளுக்கும் குடியிருப்புகளைக் கட்டினார். இதனால் 1822-ம் ஆண்டில் நீலகிரி, மெட்ராஸ் பிரசிடென்சியின் கோடைக்காலத் தலைமையகமாக அறிவிக்கப்பட்டது.

சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டுப் பணிகளும் இவரது காலத்தில்தான் மேற்கொள்ளப்பட்டன. இதன்பின் ஐரோப்பிய, தென்னாப்பிரிக்க நாடுகளில் இருந்து பல வகையான மலர்கள், காய்கள், பழம் தரும் பல வகையான மரவகைகளை இறக்குமதி செய்து தேயிலை, சின்கோனா, தேக்கு உள்ளிட்ட பயிர்களையும் , முட்டைகோஸ், கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறிகளையும் பயிரிட்டு அறிமுகப்படுத்தினார். படுகர் மக்களின் உயர்வுக்காக மேம்படுத்தப்பட்ட பார்லி விதைகளையும் இறக்குமதி செய்தார். மேலும் ஊட்டி நகரின் நடுவில் மிகப்பெரிய ஏரி ஒன்றையும் வெட்டி மலையின் பல பகுதிகளில் ஓடிய சிறிய ஓடைகளை அதனுடன் இணைத்து நீர்வளத்தை உறுதி செய்தார்.

தன்னுடைய திறமையான பணிகளால் பல்வேறு உயர்நிலைகளை அடைந்த ஜான் சல்லிவருக்கு, 1820-ம் ஆண்டு கென்ரித்தா என்பவருடன் திருமணம் நடந்தேறியது. இவர்களுக்கு 1822-ம் ஆண்டில் காரியட் ஆன் என்ற முதல் பெண் குழந்தை பிறந்தது, இதைத் தொடர்ந்து மொத்தம் ஒன்பது குழந்தைகளும் இத்தம்பதியினருக்குப் பிறந்தன. இதில் இரண்டு குழந்தைகள் ஊட்டியிலேயே இறந்தும்விட்டன. அதன் பின் இவர் மனைவி கென்ரித்தா 1838-ம் ஆண்டு ஊட்டியிலேயே இயற்கையை எய்தினார். மறைந்த இவரின் இரண்டு குழந்தைகள் மற்றும் மனைவியின் உடல் உட்பட மூவரின் உடல்களும் அங்கேயே புனித ஸ்டீபன் பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட்டன.

ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியில் சாதாரண எழுத்தராகப் பணியில் சேர்ந்து, தன்னுடைய சீரிய உழைப்பால் பல்வேறு உயர் பதவிகளைக் கண்ட ஜான் சல்லிவர் 1841ஆம் ஆண்டு மே மாதம் பணி ஓய்வு பெற்றுக்கொண்டு மீண்டும் இங்கிலாந்திற்குத் திரும்பினார். குழந்தைகளுடன் தன் வாழ்வின் இறுதிநாள்களைக் கழித்த அவர், 1855-ம் ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி தன் 66-ம் வயதில் இவ்வுலக வாழ்வை விட்டுப் பிரிந்தார். சுதந்திர இந்தியாவில் ஜான் சல்லிவனைப் பெருமைப்படுத்தும் விதமாக 1999-ம் ஆண்டு முதல் சுமார் பத்தாண்டுக்காலம் அவருடைய கல்லறையைக் கண்டறியும் பணி தொடங்கி நடைபெற்றுவந்தது. இறுதியில் 2009 ஜூலை 14 அன்று இங்கிலாந்தின் ஈத்ரு விமானநிலையத்தின் அருகிலுள்ள புனித லாரன்சு பேராலயத்தில் உள்ள இவரது கல்லறை கண்டுபிடிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஊட்டியை உருவாக்கி அதன் முதல் கலெக்டராகப் பொறுப்பேற்று மக்களுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் செய்த ஜான் சல்லிவனுக்கு ஊட்டியின் 200-வது ஆண்டு விழாக் கொண்டாட்டத்தை முன்னிட்டு சிலை அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதனை ஏற்ற அரசு, ஜான் சல்லிவனை நினைவுகூரும் விதமாக உதகை அரசு தாவரவியல் பூங்கா சாலையில் அவரது மார்பளவு வெண்கலச் சிலையை அமைத்தது. இதை முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் திறந்து வைத்தார்.Similar Post You May Like

 • இன்று உலக இசை தினம்: இசையால் ஏற்படும் நன்மைகள்!

   Tue, June 21, 2022 No Comments Read More...

  இசையைக் கேட்பதால் மூளை, மகிழ்ச்சியை ஏற்படுத்தக் கூடிய டோபமைன் என்னும் ஹார்மோனை சுரக்கச் செய்கிறது. இசையையும் மனிதனையும் பிரிக்க முடியாது என்பார்கள். அதனால்தான் இசையால் நாமும் நம்மால் இசையும் வாழ்ந்

 • கோவை - ஷீரடி தனியார் ரயில்: பயணிகளின் முதல் அனுபவம் எப்படி?

   Mon, June 20, 2022 No Comments Read More...

  இந்திய அரசு அறிவித்திருந்த `பாரத் கௌரவ்` என்ற பெயரிலான தனியார் சுற்றுலா ரயில்கள் சேவை திட்டத்தின்படி, தமிழ்நாட்டிலிருந்து முதலாவது தனியார் ரயில் கோவையிலிருந்து ஷீரடிக்கு கடந்த 13ஆம் தேதி புறப்ப்டடு வி

 • இந்திய வாக்காளர்கள் - உலகின் 8வது அதிசயம்!

   Tue, January 25, 2022 No Comments Read More...

  பொதுமக்கள், அரசுகள், தேர்தல் ஆணையம் மூவரும் சம அதிகாரத்துடன் இணைந்து செயல் புரிதல் வேண்டும். இதற்கு வழி கோலட்டும், இந்திய தேர்தல் ஆணையம். இன்று தேசிய வாக்காளர் தினம். இந்தியா, 1947-ம் ஆண்டு சுதந்தி
Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel