கேரட் : கண்பார்வைக்கு மட்டுமல்ல, இதயத்துக்கும் நலம் தரும்...

 Wednesday, May 25, 2022  06:08 AM   No Comments

கேரட் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துதல், கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், நீரிழிவு மற்றும் புற்றுநோயைத் தடுத்தல் என பல்வேறு நன்மைகளை வழங்குகிறது.

கேரட் சாப்பிடுவது கண்களுக்கு நல்லது என்று பலரும் சொல்ல கேள்விப்பட்டிருப்போம். கண் பார்வையை மட்டும் கேரட் மேம்படுத்துவதில்லை. நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துதல், கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், நீரிழிவு மற்றும் புற்றுநோயைத் தடுத்தல் என பல்வேறு நன்மைகளை வழங்குகிறது.

கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டின், வைட்டமின் ஏ-வை ரோடாப்சின் நிறமியாக மாற்ற உதவுகிறது. இது மாலை நேரம் அல்லது குறைந்த வெளிச்சம் உள்ள சூழலில் கண் பார்வையை மேம்படுத்தும் தன்மை கொண்டது.

குறைந்த அடர்த்தி கொண்ட லிப்போ புரோட்டீன் கொழுப்பில் 25 சதவீதம் வரை குறைப்பதற்கு வைட்டமின் ஏ உதவும் என்று ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. இதனால் இதய ஆரோக்கியம் மேம்படும். மேலும் இது தீங்கு விளைவிக்கும் சூரிய ஒளியில் இருந்து சருமத்தை காக்கும். மேலும் முன்கூட்டியே சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவதையும் கட்டுப்படுத்தும்.

கரோட்டினாய்டுகள் புற்றுநோய் உயிரணுக்களின் வளர்ச்சியை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆன்டி ஆக்சிடென்டுகள், நீரிழிவு எதிர்ப்பு பண்புகள், கொழுப்பைக் குறைக்கும் திறன் மற்றும் நோய் எதிர்ப்பு மண்டல செயல்பாட்டை மேம்படுத்தும் தன்மைகளை கொண்டிருப்பதன் மூலம் இதய நோய்களை தடுப்பதற்கும் உதவுகின்றன.நுரையீரல் மற்றும் சரும புற்றுநோய்க்கான வாய்ப்புகளை குறைக்கவும் கரோட்டினாய்டுகள் உதவுகின்றன. கண் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த துணை புரிகின்றன. கரோட்டினாய்டு நிறமிதான், கேரட்டுக்கு தனித்துவமான நிறத்தை அளிக்கிறது.

இந்தியாவில் சுமார் 30 சதவீதம் பேர் கல்லீரல் நோய் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். மரபணு காரணிகள் மற்றும் மாறுபட்ட வாழ்க்கை முறை காரணமாக இந்த நோய் உண்டாகிறது.

போதுமான அளவு கேரட்டை உட்கொள்வது, பிரக்டோஸ் உணவுகளை எடுத்துக்கொள்வது ஆரோக்கியமான கல்லீரலுக்கு வழிவகுக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கேரட்டில் வைட்டமின் பி-6, நார்ச்சத்து இவை இரண்டும் அதிகம் உள்ளன. டைப்-2 சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு வைட்டமின் பி-1 மற்றும் பி-6 குறைபாடு ஏற்படக்கூடும்.

நீரிழிவு நோயாளிகள் ரத்தத்தில் சர்க்கரை அளவை நிர்வகிக்க நார்ச்சத்து கொண்ட பொருட்களை உட்கொள்வது முக்கியமானது. உணவு மூலம் நார்ச்சத்தை பெறுவது டைப்-2 நீரிழிவு நோய் அபாயத்தைக் குறைக்கவும் உதவும். மேலும் நார்ச்சத்து உட்கொள்வது ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை குறைக்கவும் உதவும்.

கேரட் ஆரோக்கியமானதாக இருந்தாலும், அதிகம் உட்கொள்வது ஆபத்தானது. குறிப்பாக கேரட்டை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது உடலில் நச்சுத்தன்மையை அதிகரிக்க வழிவகுக்கும். மேலும் பீட்டா கரோட்டின் அளவு அதிகரித்து சருமத்தில் நிறமாற்றத்தையும் ஏற்படுத்தும்.Similar Post You May Like
Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel