கோவை - ஷீரடி தனியார் ரயில்: பயணிகளின் முதல் அனுபவம் எப்படி?

இந்திய அரசு அறிவித்திருந்த `பாரத் கௌரவ்` என்ற பெயரிலான தனியார் சுற்றுலா ரயில்கள் சேவை திட்டத்தின்படி, தமிழ்நாட்டிலிருந்து முதலாவது தனியார் ரயில் கோவையிலிருந்து ஷீரடிக்கு கடந்த 13ஆம் தேதி புறப்ப்டடு விட்டு திரும்பியிருக்கிறது.
ரயில்களை தனியார்மயப்படுத்த பல்வேறு தரப்புகளிலிருந்து வந்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் இந்த ரயில் இயக்கப்பட்டது. கோவை - ஷீரடி ரயிலை தனியாருக்கு கொடுக்காமல் ரயில்வே துறையே எடுத்து நடத்த வேண்டும் என திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்த நிலையில் கடந்த 13ஆம் தேதி ஷீரடி கிளம்பிய ரயில் பயணத்தை முடித்து விட்டு கோவை திரும்பியுள்ளது. இதில் பயணம் செய்த தன்னார்வலர்களும் பயணிகளும் பல்வேறு குறைகளை முன்வைத்துள்ளனர். பிபிசி தமிழுக்காக அவர்களில் சிலரிடம் பேசினோம்.
கோவை - ஷீரடி தனியார் ரயிலில் தன்னார்வலர் ஒருவர் பிபிசி தமிழிடம் பேசுகையில், `முதலில் ரயிலில் வழங்கப்பட்ட உணவின் விலை மிக அதிகமாக இருந்தது. மந்திராலயாவுக்கு சென்று வர வாகனம் ஏற்பாடு செய்து தரப்படும் என்றார்கள். ஆனால் வாகனம் முறையாக ஏற்பாடு செய்யப்படவில்லை. பலரும் சொந்த செலவில் வாகனம் ஏற்பாடு செய்து சென்று வந்தனர்.
கோவை - ஷீரடி தனியார் ரயில்
பேக்கேஜில் வருபவர்களுக்கு தங்குமிடம் ஏற்பாடு செய்யப்படும் என்று அறிவித்திருந்தனர். ஆனால் வெகு நேரம் காத்திருந்த பிறகே தங்குவதற்கு இடம் கிடைத்தது. பேக்கேஜில் குளிர்வசதி (ஏசி) அறை வழங்கப்படும் எனக் கூறப்பட்டிருந்தது. ஆனால் பலருக்கும் குளிர்வசதி இல்லாத அறைகள் கிடைத்தன. அறைகள் ஏற்பாடு செய்வதில் சரியான ஒருங்கிணைப்பு இல்லை.
விஐபி தரிசனம் ஏற்பாடு செய்யப்படும் என்று கூறப்பட்டிருந்தது. மதியம் 2 மணிக்கு வரச் சொல்லி இருந்தார்கள். ஆனால் அனைத்து பயணிகளுக்கும் முறையான தரிசனம் கிடைக்கவில்லை. நீண்ட நேரம் காத்திருந்த பலர் இலவச தரிசனத்திலே சென்று திரும்பி விட்டனர்` என்றார்.
பயணிகளுக்கு இடையே பாகுபாடு:
இது தொடர்பாக கோவை - ஷீரடி ரயிலில் பயணம் செய்த பயணி ஒருவர் பிபிசி தமிழிடம் பேசுகையில், `ஆன்மிக பயணம் என்பதால் வந்தோம். ரயிலில் பராமரிப்பு நன்றாக இருந்தது. ஆனால் ஏற்பாடுகளில் பல குளறுபடிகள் இருந்தன. பேக்கேஜில் பயணித்த பலருக்கும் ஏசி அறைகள் கிடைக்கவில்லை.

ஏசி வகுப்பில் பயணித்தவர்களுக்கு ஏசி அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. ஸ்லிப்பர் வகுப்பில் வந்தவர்களுக்கு பாரபட்சமான அணுகுமுறை இருந்தது. ஏசி வகுப்பில் கிடைத்த வசதிகள் கூட ஸ்லீப்பர் வகுப்பில் கிடைக்கவில்லை. பல்வேறு இடங்களில் தகவல் பரிமாற்றத்திலும், ஒருங்கிணைப்பில் குழப்பங்கள் தான் நிலவின. தன்னார்வலர்களுக்கு இடையே ஒருங்கிணைப்பு இல்லாமல் பயணிகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
கோவை - ஷீரடி தனியார் ரயில்
ரயிலில் பயணித்த நிர்வாகிகள், பிரதிநிதிகளிடம் குறைகளை தெரிவிக்க முடியவில்லை. முதல் முறை பயணம் என்பதால் சில குறைகள் இருக்கத்தான் செய்யும். ஆனால் நிர்வாகம் பயணம் சிறப்பாக அமைந்ததாக விளம்பரம் செய்யக்கூடாது. தன்னார்வலர்கள் சிலர் இருந்தார்களே தவிர தனியார் நிறுவனத்தின் பிரதிநிதிகளை பார்க்க முடியவில்லை
மந்திராலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாகனம் இரண்டு மணி நேரம் எடுக்கவில்லை. அங்கே ஐந்து மணி நேரம் தான் ரயிலே நிறுத்தப்பட்டது. அதற்குள் சென்று திரும்ப முடியாது.
ரயில் பயணத்தில் உணவு முறையாக கிடைக்கவில்லை. குழந்தைகள் பலரும் பிஸ்கட் மட்டுமே சாப்பிட்டு வர வேண்டிய நிலை இருந்தது. தண்ணீர் சரியாக கிடைக்கவில்லை. குண்டக்கல் ரயில் நிறுத்தத்தில் தண்ணீர் வாங்கச் சென்ற பெண் பயணி ஒருவர் நூலிழையில் ரயிலை தவறவிட்டிருப்பார். ரயிலிலே அதற்கான ஏற்பாடுகளைச் செய்திருக்கலாம்.
ஆனால் ஏற்பாடு செய்ய 10 நாட்கள் தான் அவகாசம் இருந்ததாக காரணம் கூறினார்கள். இத்தகைய சிக்கல்களை தவிர்த்திருக்கலாம். ரயில் நிர்வாகத்திடம் புகார் தெரிவிக்க வசதியில்லை. அடுத்த முறை பயணிக்க நிச்சயம் யோசிப்போம்` என்றார்.
கோவை - ஷீரடி தனியார் ரயில்
இது தொடர்பாக இந்த திட்ட இயக்குநர் ரவி சங்கர் பிபிசி தமிழிடம் பேசுகையில், `20 நாட்களில் இந்த பயணத்திற்கான மொத்த ஏற்பாடுகளையும் மேற்கொண்டோம். பேக்கேஜில் வந்தவர்களுக்கு அனைத்து வசதிகளும் முறையாக கொடுக்கப்பட்டுள்ளன. சாதாரண கட்டணத்தில் வந்த பலர், அங்கு வந்து பேக்கேஜ் ஆக மாற்ற வேண்டும் என்றார்கள்.
அது போக 300-க்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் இலவசமாக வழங்கப்பட்டன. அதில் வந்தவர்களும் அங்கு வந்து அறை ஏற்பாடு செய்து தர வேண்டும் என திடீர் கோரிக்கை வைத்தார்கள். அதனால் தான் சில குளறுபடிகள் எழுந்தன. முறையாக பேக்கேஜிற்கு முன்பதிவு செய்தவர்களுக்கு எந்த இடர்பாடும் ஏற்படவில்லை. மற்ற பயணிகளுக்கு தான் குறை எழுந்துள்ளது. அடுத்தமுறை இலவச டிக்கெட்டுகளை வழங்கப்போவதில்லை என முடிவெடுத்துள்ளோம்.
உணவு கட்டணம் அதிகம் என்கிற குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது. தரமான உணவு வழங்கப்பட்டுள்ளது. வெளியில் எங்கு சென்றாலும் இதே அளவில் தான் வசூலிக்கப்படுகிறது. முதல்முறை பயணம் என்பதால் சில குறைகள் இருப்பதாக தெரிகின்றது. அடுத்த பயணத்தில் இந்த குறைகள் எல்லாம் சரி செய்யப்படும்,` என்றார்.
-- மோகன், பிபிசி தமிழுக்காக

Similar Post You May Like
-
இன்று உலக இசை தினம்: இசையால் ஏற்படும் நன்மைகள்!
Tue, June 21, 2022 No Comments Read More...இசையைக் கேட்பதால் மூளை, மகிழ்ச்சியை ஏற்படுத்தக் கூடிய டோபமைன் என்னும் ஹார்மோனை சுரக்கச் செய்கிறது. இசையையும் மனிதனையும் பிரிக்க முடியாது என்பார்கள். அதனால்தான் இசையால் நாமும் நம்மால் இசையும் வாழ்ந்
-
அடர் காட்டை `மலைகளின் அரசி'யாக்கிய கலெக்டர்! யார் இந்த ஜான் சல்லிவன்? ஊட்டி பிறந்த கதை!
ஊட்டி நகரின் நடுவில் மிகப்பெரிய ஏரி ஒன்றையும் வெட்டி மலையின் பல பகுதிகளில் ஓடிய சிறிய ஓடைகளை அதனுடன் இணைத்து நீர்வளத்தை உறுதி செய்தார். பரபரப்பான மாநகர வாழ்க்கை வாழ்பவர்கள் தங்களை கொஞ்சமேனும் ஆசுவா
-
இந்திய வாக்காளர்கள் - உலகின் 8வது அதிசயம்!
பொதுமக்கள், அரசுகள், தேர்தல் ஆணையம் மூவரும் சம அதிகாரத்துடன் இணைந்து செயல் புரிதல் வேண்டும். இதற்கு வழி கோலட்டும், இந்திய தேர்தல் ஆணையம். இன்று தேசிய வாக்காளர் தினம். இந்தியா, 1947-ம் ஆண்டு சுதந்தி
